கிராமத்து அரட்டை அரசியல் - 3
கி.அ.அ.அனானி மெயிலில் அனுப்பிய 3-வது பாகம் பதிவாக ! என் நேரடி அனுபவம், அரட்டையைத் தொடர்கிறது !!!
*****************************
வழக்கம் போல் மூக்கையண்ணன் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்.வீரம்மாள் பையன் சின்ராசு பள்ளிக்கூட பையுடன் அழுது கொண்டே ஓடி வந்தான்...பின்னாலேயே வீரம்மாள் அவனை அடிக்க கையில் புளியங்கொம்புடன் துரத்திக் கொண்டு வந்தாள்.
""எலே சின்ராசு..நில்லு...ஏண்டா அழுவுற"""
அதற்குள் அவனை பிடித்து விட்ட வீரம்மாள் சுளீர் என்று ஒன்று வைத்தாள்.
சின்ராசை அவளிடம் இருந்து பிரித்து அடி படுவதை தடுத்த மூக்கய்யண்ணன் " ஏ.. வீரம்மா...என்ன..கோட்டி...கீட்டி பிடுச்சுருச்சா..புள்ளையப்போட்டு புளிய விளாரால இந்த அடி அடிக்கிற...அப்படி என்ன செஞ்சான்""
"இதக் கேளுங்கண்ணே..கணக்குல முட்டை வாங்கிட்டு வந்துருக்கான் ... கேட்டா சரியாதான் கணக்கு போட்டேன் அப்படீங்குறான் மூதி...தெனைக்கும் வாத்தி என்னைக் கூப்பிட்டு திட்டுது "
" அப்படி என்ன தப்பா போட்ட "
"786 + 734 எவ்வளவுன்னு கேட்டாங்க...நானு கூட்டி கரெக்டா 1672-ன்னு சொன்னேன் அதுக்கு வாத்தியார் தப்புன்னு சொல்லி முட்டை போட்டுட்டார் " என்றான் சின்ராசு.
கூட்டிப் பார்த்த மூக்கய்யண்ணன் " எலே 786 + 734 =1520 ல்ல வரும்...1672 எப்படிலெ வரும் ? சரியா படி" என்றார்
"இல்லை மாமா...1672 தான் சரி... அதிகாரிகள் சொன்னாங்கன்னுட்டு பேப்பர்ல கூட போட்டிருந்தாங்களே " என்றான்
"என்னாது...சரியா...அதுவும் அதிகாரிகள் சொன்னாங்களா? என்னடா சொல்ற ?"
"மாமா..மாநகராட்சி தேர்தல்ல சென்னை துறைமுகம் தொகுதி 23 ஆம் வார்டுல 394 ஆம் நம்பர் பூத்துல மொத்தம் 786 ஆண் மற்றும் 734 பெண் வாக்காளர்களாம்...தேர்தல் முடிஞ்சப்புறம் மொத்தம் 1672 வாக்குகள் பதிவாகியிருந்ததாம்...அதிகாரிகள் கூட்டி கழிச்சு பாத்து வெற்றிகரமா நூத்துக்கு நூத்துபத்து சதவிகிதம் வாக்கு பதிவாகியிருக்கு அப்படீன்னு அறிவிச்சாங்களாம். அப்புறம் ஞானோதயம் வந்து அடடா.....என்னதான் எல்லாரும் ஓட்டு போட்டாலும் நூறு சதவிகிதத்துக்கு மேல வாக்கு பதிவாகக்கூடாதேன்னு கண்டு புடிச்சு அந்த பூத்துல மறு வாக்கு பதிவு பண்ணி அப்ப எவ்வளவு ஓட்டு பதிவாகுதுன்னு பார்க்கலாம் அப்படீன்னு புது ஓட்டு பெட்டிய வச்சுகிட்டு குத்த வச்சு உக்காந்துருக்காங்களாம்..இன்னும் படிச்ச அதிகாரிகளுக்கே இந்தக் கனக்குக்கு சரியா விடை தெரியலை..அதுக்குள்ள எங்க வாத்தியார் கணக்கு தப்புன்னுட்டார்...எங்க ஆத்தா அடிக்க வருது...நீங்க வேற பஞ்சாயத்து பண்ண வந்துட்டீங்க..போனீங்களா " என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.
அவன் பதிலைக் கேட்டு மூக்கையண்ணன் முகம் போன போக்கைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரிக்க அந்த இடம் வடிவேலு படம் ஓடும் சினிமா கொட்டகை போல மாறியது.
*************************
கி.அ.அ.அனானி பேசியிருப்பது ஓரிடத்தில் நடந்த கேலிகூத்தைப் பற்றி தான். எனக்கு நேரடி அனுபவம் ஏற்பட்டது. வெள்ளியன்று காலை பத்து மணியளவில் வாக்குச்சாவடிக்கு சென்றிருந்தேன். அலுவலர்கள், காவலர் தவிர யாருமில்லை. 'சட்டமன்ற தேர்தலில் இம்மாதிரி இல்லையே, இதென்ன விநோதமாக இருக்கிறதே' என்று எண்ணியபடி நுழைந்தால், ஒரு அலுவலர் ஒன்றும் விசாரிக்காமல், ஒரு வாக்குச்சீட்டைக் கொடுத்து, முத்திரையிட்டு வாக்குப்பெட்டியில் போடுமாறு கூறினார் !!!
"என்னங்க, என் பேரை வாக்காளர் லிஸ்டில் சரி பார்க்கவில்லை, வாக்குச்சீட்டின் counterfoilஇல் கையெழுத்தும் வாங்கவில்லை, கையில் மை வைக்க குச்சியும் காணவில்லை !!! உங்கள் Returning officer எங்கே ?" என்று கேட்டதற்கு, அவர் டீ சாப்பிடப் போயிருப்பதாகக் கூறினர். ஒப்புக்காக, எதையோ செய்து வாக்களிக்க விட்டனர். அங்கிருந்த ஒருவர், வாக்குப்பெட்டிகள் ஏற்கனவே போய் விட்டதால், நீங்கள் அளித்த வாக்கு வேஸ்ட் என்றார் !!! "என்னங்க, இப்டி சொல்றீங்க?" என்றதற்கு, "சார், எங்களுக்கும் பிள்ளைக் குட்டி இருக்குல்ல" என்றவுடன், வெளியில் இருந்த போலிஸ் அதிகாரியிடம் சென்று, "என்ன சார், இது ? ஒரே கூத்தா இருக்கு" என்றேன். அவர் "ஒன்றும் சொல்வதற்கில்லை, ஏதோ வோட்டு போட விட்டார்கள் இல்லையா, போய் ஒங்க வேலையைப் பாருங்கள்" என்றார். அவருக்கு என் நன்றியை தெரிவித்தேன் !!! வெளியே இருந்த சிலர் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தது ஏன் என்று விளங்கவில்லை ;-)
எது எப்படியிருந்தாலும், வாக்குச் சாவடிக்கு தைரியமாகச் சென்று என் ஜனநாயகக் கடமையைச் செய்ததிலும், என் ரேஷன் கார்டைக் காப்பாற்றிக் கொண்டதிலும் (மருத்துவர் ஐயா, தேர்தலில் வாக்கு போடாதவர்களின் ரேஷன் அட்டைகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் :)) எனக்கு பரம திருப்தி. அந்த திருப்தியோடு, மாதாந்திர 'புவா'வுக்கு வழி செய்யும் உருப்படியான வேலையைத் தொடர அலுவகலம் சென்றேன் !!! போகும் வழியில், பாஜக வேட்பாளர், ஒரு ஐந்து பேரோடு மெயின் ரோட்டின் நடுவில் நின்றபடி, பரிதாபமாக "ஜனநாயகப் படுகொலை ஒழிக" என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இன்னும் சற்று தொலைவில், டாடா சுமோக்கள் அழகாக அணி வகுத்துச் சென்றதையும் பார்த்தேன் !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
3 மறுமொழிகள்:
சூப்பர் :)
//போகும் வழியில், பாஜக வேட்பாளர், ஒரு ஐந்து பேரோடு மெயின் ரோட்டின் நடுவில் நின்றபடி, பரிதாபமாக "ஜனநாயகப் படுகொலை ஒழிக" என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இன்னும் சற்று தொலைவில், டாடா சுமோக்கள் அழகாக அணி வகுத்துச் சென்றதையும் பார்த்தேன் !!!
//
;)))
Thanks, CT, the great :)
Post a Comment